கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடப்படும் பணிகள் தொடங்கி நடைபெற்று, தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் இன்று (01.03.2021) முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி முதற்கட்ட கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தியும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிக்கு 250 ரூபாய் கட்டணமாக வசூலித்துக்கொள்ளலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவர்கள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மருத்துவச் சான்றிதழைப் பெற்றுத் தர வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை தர வேண்டும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.