கொரோனா இரண்டாம் அலையின்போது மருத்துவமனை மற்றும் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளை சத்தான உணவு, சோப்பு, போர்வை, தின்பண்டங்கள், குடிநீர், நோயாளிகளை அழைத்துவர, அழைத்து சென்றுவிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வாகன வாடகை தொகைகள் போன்றவற்றை சம்மந்தப்பட்ட ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், பொதுசுகாதார துறையும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக செய்யார் சுகாதார மாவட்டத்தில் வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. புதிய ஆட்சி அமைந்ததும் தங்களது பணம் வந்துவிடும் என இவர்கள் நம்பினார்கள். அதிகாரிகளோ, நீங்க செலவு செய்தது போன ஆட்சி. இது புதிய ஆட்சி. அதனால் அரசுக்கு அறிக்கை அனுப்பி நிதி ஒதுக்கீடு பெற்று பணத்தை வாங்கிதருகிறோம் எனச்சொல்லியுள்ளனர். சப்ளை செய்தவர்களும் சரியென ஏற்றுக்கொண்டுள்ளனர். நிர்வாக ரீதியாக மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையில் இடமாறுதல்கள் நடைபெற்றதால் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதியதாக வந்த அதிகாரிகள், ‘நீங்க சப்ளை செய்திங்கன்னு நாங்க எப்படி நம்பறது, அதெல்லாம் முடியாது’ என இழுக்கடித்துள்ளனர். ஒருவழியாக பேசி பொதுசுகாதாரத்துறையில் உள்ள அதிகாரிகளை சரிக்கட்டி சம்மதிக்கவைத்துள்ளனர். அதற்கே மாதங்கள் கடந்த நிலையில், கடந்த மாதம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொரோனா நோயாளிகளுக்கு உணவு உட்பட பொருட்கள் சப்ளை செய்தவர்களை அழைத்த அதிகாரிகள், நீங்கள் தந்தள்ள பில் தொகையில் இருந்து 50 சதவிதம் தருகிறோம், வாங்கிக்கொள்ளுங்கள். மீதி தொகையை நிதி ஒதுக்கீடு வந்தபிறகு தருகிறோம். நீங்கள் அதனை ஒப்புக்கொண்டு எழுதி தந்தால் 50 சதவித தொகையை தருகிறோம் எனச் சொல்லியுள்ளனர். சப்ளை செய்தவர்களும் குழப்பமான மனநிலையில் எழுதி தந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசும் பாதிக்கப்பட்ட வியாபாரிகள், அதிகாரிகளை நம்பித்தான் கடனுக்கு பொருட்களை வாங்கி நோயாளிகளுக்கு தேவையானதை சப்ளை செய்தோம். தேர்தல் வந்துவிட்டது பணம் பிறகு தருகிறோம் என்றார்கள் மருத்துவ அதிகாரிகள். நாங்களும் சரியென ஏற்றுக்கொண்டோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் ஆட்சியாளர்களுக்கு கமிஷன் தரவேண்டும் எனச்சொல்லி எங்களை மிரட்டினார்கள். லட்சங்களில் பாக்கி தொகை வரவேண்டியுள்ளது. இரண்டாம் அலை முடிந்து, மூன்றாம் அலை முடிந்து, நான்காம் அலை தொடங்கியுள்ளது. இப்போதுவரை எங்களுக்கு தரவேண்டிய தொகையை தராமல் அதிகாரிகள் இழுத்தடித்துவந்தவர்கள். இப்போதுவந்து 50 சதவிதம் தருகிறோம் எனச்சொல்லி எழுதி வாங்கிக்கொண்டுள்ளார்கள் என்றார்கள்.
கொரோனாவின்போது உணவு சப்ளை செய்த ஹோட்டல்களுக்கு பல லட்சம் பாக்கி வைத்திருந்தது திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத்துறை. நிதியில்லை, நிதியில்லை எனச் சொல்லி வியாபாரிகளை அலைக் கழித்துவந்துள்ளனர் அதிகாரிகள். பின்னர் டீலிங் பேசப்பட்டு முக்கிய அதிகாரி ஒருவருக்கு சில லட்சம் அவரது கமிஷனாக தரப்பட்டபின்பு, மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் சில ஹோட்டல்களுக்கு தரவேண்டிய தொகையை முழுவதும் செக் போட்டு தந்துள்ளார். இப்படி கொரோனா பில்லில் கமிஷன் அடிப்பதை அதிகாரிகள் இன்னும் நிறுத்தவில்லை என புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.