தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா நோய் தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வைக் கருத்தில் கொண்டு 10,11,12 வகுப்புகளை தவிர்த்து மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், திருச்சி தீரன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஆசிரியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
நேற்று முன்தினம் வரை பள்ளி இயங்கி வந்த நிலையில் அப்பள்ளியில் பணியாற்றக்கூடிய சக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்படாமல் இன்றும் பள்ளி வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. எனவே ஆசிரியர்கள் மூலமாகவும், மாணவர்கள் மூலமாகவும் அவர்களைச் சார்ந்து இருக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முதல் கட்டமாக பள்ளிக்கு விடுமுறை அளித்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தலாம் எனப் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.