கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டி ஊராட்சியில் 49 வயதுள்ள பெண் ஒருவர் ஒப்பந்தமுறையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். ஏற்கனவே இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது இதனால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு கரோனா பரிசோதனையும் செய்துள்ளனர். பரிசோதனையின் முடிவு வெளிவருவதற்கு முன்னரே தூய்மை பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தநிலையில் இன்று காலைதான் அவரது பரிசோதனை முடிவு வந்தது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் கொண்டாம்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர் குடியிருக்கும் வீடு மற்றும்அவர் வசிக்கும் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மதுரை வீரன் கோவில் தெருவுக்கு சீல் வைக்கபட்டது.கொண்டாம்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிய பெண் ஒருவர் கரோனா நோய் தொற்று ஏற்பட்டு முதன்முதலில் உயிரிழந்து இருப்பது கொண்டாம்பட்டி மட்டுமல்லாமல் கிணத்துக்கடவு வட்டாரத்தை சுற்றியுள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிணத்துக்கடவு தாசில்தார் ஸ்ரீதேவி கூறுகையில், இறந்துபோன தூய்மை பணியாளரின் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அவரது வீட்டை சுற்றியுள்ளவர்களுக்கு சளி மற்றும் இரத்த மாதிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்படும் எனவும், அந்த பகுதி முற்றிலும் கண்காணிக்கபடும் என்றும் கூறினார்.