தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்திருந்த காரணத்தாலும், கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்பட்டன.
9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் பள்ளிக்கு வரலாம் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சில மாணவர்களுக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. மேலும், ஆசிரியர்களுக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதியானது.
இதையடுத்து, பள்ளிகளில் கரோனா அதிகரிக்கும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இன்று (08/09/2021) பிற்பகல் 03.00 மணிக்கு காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.
இக்கூட்டத்தில், பள்ளிகளில் செய்ய வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கூட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.