தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைகாக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.
மறுபுறம் தமிழகத்தில் கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், திருமண நிகழ்ச்சிகள் உட்பட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் வரை பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து அவை நடைமுறையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குநருமான சுந்தர்.சி-க்கு கரோனா உறுதியாகி உள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் குஷ்பு போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகப் பரப்புரையில் ஈடுபட்ட இயக்குநர் சுந்தர்.சி க்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.