Skip to main content

நடப்பது போர்! வெல்வது மக்களா? கரோனாவா?  

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

 

பெரம்பலூர் மாவட்டத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் வெளிநாடுகள் வெளிமாநிலங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியவர்கள் தங்களது விவரங்களைத் தாங்களே முன்வந்து அரசிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், அவ்வாறு தெரிவிக்கத் தவறும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா அறிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர்களும், கிராம பணியாளர்களும் வீடு வீடாகச் சென்று வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உடனடியாக தெரியப்படுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். 
 

 

corona awareness

 

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 34,36 வயதுள்ள இரு நபர்களுக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, திமுக எம்பி ரவிக்குமார் அவர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.  
 

 

corona awareness

 

ஊரடங்கு உத்தரவு இன்று(24.03.2020) நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், நேற்று விழுப்புரம் நகரில் போக்குவரத்து குறைந்தது. ஹோட்டல்கள் குறைந்த அளவே திறந்திருந்தன.  ‘யாவரும் கேளிர்’ என்ற பொதுநல அமைப்பினர் உணவு தயாரித்து விழுப்புரம் பஸ் நிலையம், காந்தி சிலை உள்ளிட்ட  நகரின் பல முக்கிய இடங்களில் உணவின்றி தவித்த முதியோர்கள், ஆதரவற்றோர்களுக்கு வழங்கினர். சில இடங்களில் கரோனா வைரஸ் பரவல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில தன்னார்வ அமைப்புகளும் காவல் துறையினரும் கை கழுவும் முறையைப் பொதுமக்களுக்குச் செயல் விளக்கம் செய்துகாட்டுகின்றனர். ஒருவகையில் விழிப்புணர்வு ஏற்பட்டாலும் அந்த நிகழ்வின் போது மக்கள் கூட்டமாகக் கூடுவது கரோனா பரவலை ஊக்குவிக்கக் கூடும் என்பதை அவர்கள் உணரவேண்டும். மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என அரசு கடுமையாக வலியுறுத்தியபோதும் சில தன்னார்வ அமைப்புகள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். இந்த விஷயத்தில் காவல்துறை  கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். சில இளைஞர்கள் ஒரு பைக்கில் மூன்று,நான்கு பேர் என விதிகளை மதிக்காமல் செல்கின்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி வாகனத்தைப் பறிமுதல் செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால்தான் கரோனா மேலும் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த முடியும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

corona awareness

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் நத்தாமூர் கிளியனூர் பகுதிகளில் அரசு உத்தரவு படி வீடு வீடாகச் சென்று வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள் யார் யார் என கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், காவல்துறை மற்றும் மருத்துவத்துறையைச் சேர்ந்த குழுவினர் வேன்களில் கிராமங்களுக்குச் சென்று தும்மல், இருமல், காய்ச்சல் ஆகிய கரோனா அறிகுறி  உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதோடு அவர்களை மருத்துவமனைக்கு கொண்டுச்சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் நேரம் காலம் பாராமல், தங்கள் குடும்பத்தைப் பற்றியும் தங்களது உயிர் பற்றியும் கவலை கொள்ளாமல் பணி செய்து வருகிறார்கள். அவர்களின் உழைப்பை உணர்ந்து ஒவ்வொரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மேலும், மக்களின் கட்டுப்பாட்டை மக்களே முன்வந்து கடைப்பிடிப்பது கொஞ்சம் கடினமான ஒன்று, காவல்துறை இவற்றை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். சமரசமின்றி மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும். போர் நடக்கும்போது வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பார்கள் மக்கள். தற்போது, கரோனா என்ற வைரஸுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான போர் நடந்து வருகிறது. இதில் வெல்வது கரோனாவா? பொதுமக்களா? 

 

 

 

 

சார்ந்த செய்திகள்