Skip to main content

‘சர்ச்சையில் சிக்கிய பெண் மருத்துவர்’ - விசாரணைக்கு பின் அதிரடி நடவடிக்கை!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

‘Controversial Female Doctor’ - Action After Inquiry

 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு பகுதியைச் சேர்ந்தவர்கள் மருதமுத்து (33) - ராஜராஜேஸ்வரி (24) தம்பதியர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளார். ராஜராஜேஸ்வரி மீண்டும் கர்ப்பமடைந்த நிலையில், கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 23ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து தனியார் ஸ்கேன் மையத்திற்குச் சென்று ஸ்கேன் எடுத்துள்ளனர். அப்போது வயிற்றில் உள்ள சிசு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பின் அவர் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

அப்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த ஜோதிமணி என்ற பெண் மருத்துவர் தகவல் எதுவும் தெரிவிக்காமல் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும் அவரது கணவர் குற்றம் சாட்டியுள்ளார். இதன் பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முன்பணம் செலுத்தி ஒருமணி நேரத்தில் இறந்த பெண் சிசுவை வெளியே எடுத்துள்ளனர். அப்போது இந்த சிகிச்சையை மேற்கொண்டது மருத்துவர் ஜோதிமணி என தெரியவந்ததும் மருதமுத்து அதிர்ச்சியடைந்தார். உடனே இந்த சம்பவம் குறித்தும், மருத்துவர் ஜோதிமணி குறித்தும் காரத்தொழுவு பகுதி மக்கள் ஆட்சியர் வினீத்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.

 

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் வினீத், இச்சம்பவம் தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் பாக்கியலட்சுமி மற்றும் உடுமலை ஆர்.டி.ஓ. கீதா ஆகியோர் விசாரிக்க உத்தரவிட்டார். இதுதொடர்பான விசாரணை கடந்த 5ஆம் தேதி தொடங்கிய நிலையில், மருத்துவர் ஜோதிமணி தாராபுரத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரை, நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து சென்னை மருத்துவம் மற்றும் ஊரகப்பணிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்