Skip to main content

தொடர்ந்து ரெய்டுக்குள்ளாகும் தங்கமணி! 

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

 constant raid Thangamani

 

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை தனது ரெய்டை நடத்தியது. அதன்படி நேற்று (20.12.2021) சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் அவரது நண்பர்கள், உறவினர்கள், ஆடிட்டர், கட்டுமான நிறுவனங்கள், வீடுகள் என 14 இடங்களில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தினர். 

 

ஈரோட்டில் மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று காலைமுதல் திடீர் சோதனையிட்டனர். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என கடந்த 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மொத்தம் 69 இடங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள். அதில், ரூபாய் இரண்டு கோடியே பதினாறு லட்சம் ரொக்கம், 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி பொருட்கள், மற்றும் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் போன்றவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.

 

இந்நிலையில், 69 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து நேற்று தங்கமணியின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என ஈரோடு, நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலைமுதல் அதிரடி சோதனையிட்டனர். 

 

ஈரோடு நகரில் ஈரோடு சத்தி ரோடு அருகே உள்ள சந்தான்காடு பகுதியில் பெயிண்ட் மற்றும் கண்ணாடி விற்பனை உரிமையாளரான குமார் என்ற கோபாலகிருஷ்ணன் வீடு, வில்லரம்சம்பட்டி அருகே ஒன்டிக்காரன்பாளையம் ஐஸ்வர்யா கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தங்கமணியின் மகன் தரணிதரனின் கல்லூரி நண்பரான செந்தில்நாதன் வீடு, செங்கோடம்பள்ளம் அருகே உள்ள சக்தி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாலசுந்தரம் என்பவரது வீடு என மூன்று  இடங்களில் போலீசார் சோதனை செய்தனர். 

 

கோபாலகிருஷ்ணன் வீட்டில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும், செந்தில்நாதன் வீட்டில் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும், பாலசுந்தரம் வீட்டில் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். கடந்த 15ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட சொத்து மற்றும் வரவு செலவு கணக்குகளின் முக்கிய ஆதாரங்களைக் கொண்டு கோபாலகிருஷ்ணன், செந்தில்நாதன்,  பாலசுந்தரம் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தி, கணக்கில் வராத பல லட்சம் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

 

இதேபோல் நாமக்கல்லில் கட்டுமான நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகம், உறவினர் வீடு என 9 இடங்களிலும், பள்ளிப்பாளையத்தில் தங்கமணியின் ஆடிட்டர் அலுவலகம், சேலத்தில் ஒரு உறவினர் வீடு என தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

 

தங்கமணிக்கு பினாமிகள் மட்டும் 30 பேருக்கு மேல் இருப்பதாகவும், ஒவ்வொருவர் பெயரிலும் லட்டர் பேடு கம்பெனிகள், நூற்றுக்கணக்கான கோடிகள் வரவு செலவு நடத்தியதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பத்து வருட அமைச்சர் பதவியில் அசையும் மற்றும் அசையா சொத்தாக தங்கமணி பல மடங்கைத் தாண்டிவிட்டார் என்கிறார்கள் ரெய்டில் ஈடுபட்ட அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்