விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓங்கூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (36). இவர் மொபைல் ஃபோன் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் (11.09.2021) வீட்டைப் பூட்டிவிட்டு, உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டுக்குச் சென்றுள்ளார். மீண்டும் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 13 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சின்னசாமி ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும், தடயவியல் நிபுணர்களால் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றவர்களைத் தேடிவருகிறார்கள்.
அதே நாளில் திருக்கோவிலூர் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். கட்டட மேஸ்திரி வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி மலர் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் கலந்துகொள்வதற்காக திருவண்ணாமலை சென்றுள்ளார். மறுநாள் காலை அவரது பக்கத்து வீட்டுக்காரர் மலருக்கு செல்ஃபோனில் தொடர்புகொண்டு, மலரின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளார்.
அவசரமாக வீட்டுக்குத் திரும்பிய மலர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 6 பவுன் நகை களவு போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவுசெய்து கொள்ளையர்களைத் தேடிவருகிறார்கள்.
இதையடுத்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சிறுபாக்கம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு மகன் சந்தோஷ் குமார். விவசாயியான இவர், உடல்நிலை சரியில்லை என உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலமுருகன் என்பவர் செல்ஃபோன் மூலம் சந்தோஷ் குமாரை தொடர்புகொண்டு அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
சந்தோஷ்குமார் அவசரமாக வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் 70 ஆயிரம் ரொக்கம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் சந்தோஷ் குமார் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் வழக்குப் பதிவுசெய்து கொள்ளையர்களைத் தேடிவருகிறார். ஒரே நாளில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.