வேலூரில் அண்மையில் நில அதிர்வு ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது மீண்டும் பேரணாம்பட்டு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு செய்துவருகிறார்.
தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் நில அதிர்வு உணரப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்ததோடு அச்சத்திலும் இருந்துவந்துள்ளனர். கடந்த மாதம் 29ஆம் தேதியும் அதேபோல் இன்று (25.12.2021) காலை சுமார் 9 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்ததை அடுத்து இன்று மதியமும் நில அதிர்வு உணரப்பட்டது.
இந்நிலையில், பேரணாம்பட்டை அடுத்த தரைக்காடு பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். தற்போது வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் ஒரு தனியார் பல்கலைக்கழக புவியியல் ஆராய்ச்சி பேராசிரியர் உள்ளிட்டோர் தரைக்காடு பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர். அவர்கள் ஆய்வு மேற்கொண்டிருந்தபோதே நில அதிர்வை உணர முடிந்தது. இதனால் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.