வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, கடலூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், சென்னையைப் பொருத்தவரை ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. களியல், மாறபாடி, திருவட்டார், மாத்தூர், சிதறல், குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆறு மற்றும் கோதையாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கும் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தூரத்திற்குக் கடல் உள்வாங்கியதால் நாட்டுப் படகுகள் அனைத்தும் தரை தட்டி நிற்கின்றன. காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. நெல்லையில் கனமழை காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது. 125.79 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 131.30 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக பாபநாசம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 27 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் கன மழை பொழிந்து வந்த நிலையில், இன்றும் புளியரை, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது. கனமழை பெய்துவரும் மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.