மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31- ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார், அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது. அவர் ஒரு இரக்கமுள்ள மற்றும் கனிவான மனிதர், எனக்கும், பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை. நான் அவரை மிகவும் இழக்கிறேன், நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? அவரும் தான் ரூபாய் 400 கோடி பீரங்கி ஊழலில் சிக்கினார். எங்களை மன்னிக்க ராகுல் காந்தி யார்?" என்று அடுக்கடுக்கான கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சீமான் ஒரு பாலியல் குற்றவாளி. சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால், சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர், தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயகன், தலைவர் ராஜீவ் காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது" என்று ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.
சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன்,தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது— Jothimani (@jothims) May 21, 2022