கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நேற்று (10/10/2021) நடைபெற்ற கண்டன போராட்டத்தில் யூ-டியூபர் சாட்டை துரைமுருகன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அரசியல் கட்சிகளின் தலைவர்களை அவதூறாகப் பேசியதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவுசெய்த நாகர்கோவில் காவல்துறையினர், யூ-டியூபர் சாட்டை துரைமுருகனை நாங்குநேரியில் வைத்து கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும் கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் , "நாம் தமிழரின் இந்தப் பேச்சு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வரக்கூடிய குற்றம். தமிழ்நாட்டின் அமைதியும், அப்பாவி இளைஞர்களின் எதிர்காலமும் நாசமாகிவிடும். தமிழ்நாட்டின் அமைதியான எதிர்காலத்தில் ஒரு துளிகூட சமரசம் செய்துகொள்ளக் கூடாது. தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீமான் ஒரு பாஜக அடிவருடி. இம்மாதியான பயங்கரமான குற்றச்செயல்களிலிருந்து பாஜக தங்களைக் காப்பாற்றும் என்கிற தைரியத்தில்தான் இப்படி பேசுகிறார்கள். இதற்கு தமிழ் மண்ணில் நாம் இடம்தரக்கூடாது" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.
ட்விட்டர் பதிவுடன் சாட்டை துரைமுருகன் பேசிய காணொளியையும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.