Skip to main content

உள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்?-ஸ்ரீவில்லிபுத்தூர் சோகம்!

Published on 11/04/2021 | Edited on 11/04/2021

 

Congress candidate passed away-Srivilliputhur tragedy!

 

“பதவி வெறி பிடித்தோ, அதைவைத்து சம்பாதிக்க  நினைத்தோ, இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எல்லா வசதிகளும் ஏற்கனவே இருக்கின்றன. ஒரு எம்.எல்.ஏ.வானால், நான் மிகவும் புனிதமாகக் கருதும் மக்கள் சேவையை மிகநல்ல முறையில் நிறைவேற்ற முடியும் என்பதற்காகவே தேர்தலில் நிற்கிறேன். நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்து எம்.எல்.ஏ. ஆக்கினால், 5 ஆண்டுகளும் எனக்கு கிடைக்ககூடிய சம்பளத்தை,  அப்படியே தொகுதி மக்களுக்காக செலவழிப்பேன். நான் நேசிக்கும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை ஒரு ஸ்மார்ட் சிட்டி ஆக்குவேன்.” என்றெல்லாம், உதட்டளவில் இல்லாமல், உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வாக்குறுதி அளித்த  ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், கொரோனா தொற்றின் காரணமாக, இன்று காலை 7-55 மணியளவில் உயிரிழந்தார் என்பதை, இத்தொகுதி மக்களால் ஜீரணிக்க முடியவில்லை.

 

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில  உறுப்பினரான மாதவராவ், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சீட் கேட்டு போராடி, தற்போதுதான் வேட்பாளராக முடிந்தது. வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, பிரச்சாரத்திலும் ஈடுபட்டபோது, கொரோனா தொற்றுக்கு ஆளாகி, மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு தடவை மாரடைப்பு வந்ததாக, மருத்துவ வட்டார தகவல் சொல்கிறது. ஆனாலும்,  மாதவராவ் வெற்றிக்காக, அவருடைய மகள் திவ்யா தீவிரமாக தேர்தல் பணியாற்றினார். தொட்டுவிடும் தூரத்திலேயே வெற்றி என களநிலவரம் சாதகமாக இருந்த நிலையில், மாதவராவின் முப்பத்தைந்தாண்டு எம்.எல்.ஏ. கனவு நிறைவேறிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், இயற்கை அவரை அழைத்துக்கொண்டது, பெரும் சோகம்தான்!

 

“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதெனச் சொல்வார்கள். அமரராகிவிட்ட போதிலும், மாதவராவின் மூச்சுக்காற்று, இத்தொகுதியைச் சுற்றிக்கொண்டேதான் இருக்கும்.” என்கிறார்கள், அவரது குடும்பத்தினர். 

 

 

சார்ந்த செய்திகள்