தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த விஜயகுமார் தனது உறவினர் பெண்ணுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு வந்து கொண்டிருந்த போது பனவெளி என்னுமிடத்தில் எதிரில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விஜயகுமார் சென்ற வாகனத்தை நிறுத்தி அவரிடம் இருந்த செல்போன், பணத்தைப் பறிக்க முயன்ற போது கொடுக்க மறுத்ததால் ஒரு வாளால் விஜயகுமாரை தாக்கினர். இதில் விஜயகுமாருக்கு மூக்கில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில், அவரிடம் இருந்து செல்போனையும் கூட வந்த பெண் அணிந்திருந்த தோடுகளையும் பறித்துக் கொண்டு வேகமாக சென்றுள்ளனர்.
அந்த வழியாக வந்தவர்கள் சம்பவம் குறித்து காவல்துறையின் 100 என்ற தொலைப்பேசி எண்ணுக்கு தகவல் சொல்ல உடனே நடுக்காவேரி காவல்நிலைய சோதனைச் சாவடிக்கு தகவல் பறந்துள்ளது. சோதனைச்சாவடி பணியில் இருந்த காவலர்கள் கலியராஷ், முரளி ஆகியோர் திருடர்கள் சென்ற வழியில் மோட்டார் சைக்கிளில் விரட்டிச் செல்லும் போதே, அந்த பகுதியில் பணியில் இருந்த நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் இருந்த காவலர் நெடுஞ்செழியனுக்கு தகவல் கொடுக்க உடனே ரோந்துப் பணியில் இருந்த வாகனத்தை காவலர் ராஜ்குமார் வேகமாக ஓட்டி சென்று திருடர்கள் சென்ற வாகனம் மீது மோதினார்.
திருடர்களின் வாகனம் கீழே சாய்ந்த நிலையில் எழுந்த திருடர்கள் வயல் வெளியில் ஓடிய போது போலீசார் வேகமாக ஓடி மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த வாள், செல்போன், தங்கத் தோடு, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் கும்பகோணம் மொட்டைக்கோபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 20), தாராசுரம் ரமேஷ் (வயது 21) என்பதும் அவர்கள் ஏற்கனவே பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
மேலும் திருடர்களின் தாக்குதலில் காயமடைந்த விஜயகுமார் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் பிரசாத் என்ற காவலர் தனி ஆளாக கார் திருடனை விரட்டிச் சென்று பிடித்தார். அதேபோல தஞ்சையில் 4 போலீசார் 2 திருடர்களை விரட்டிச் சென்று பிடித்துள்ளனர். போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.