
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றிய திமுக மகளிர் தொண்டரணியில் இருப்பவர் மஞ்சுளா. இவர் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருக்கு உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். அங்கு சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் குடியாத்தம் ஒ.செ கல்லூர் ரவி மீது குற்றம்சாட்டி சமூக வளைத்தளங்களில் கடுமையாக கருத்து பதிவிட்டுள்ளார் மஞ்சுளா. அதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பக்கத்து ஊராட்சியான தாட்டிமானபல்லியிலிருந்து பக்கத்து ஊரான கல்லப்பாடியில் போட்டியிட்டேன். ஆனால், நான் போட்டியிடுவதை விரும்பாத குடியாத்தம் முன்னாள் ஒருங்கிணைந்த ஒன்றிய செயலாளர் கல்லூர் ரவி, ஒரு சுயேட்சை வேட்பாளரை தென்னை மர சின்னத்தில் நிற்கவைத்து தனது ஆளும் அதிகாரம் அத்தனையும் பயன்படுத்தி மிக வெளிப்படையாகவே எனக்கு எதிராக வேலை செய்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட என்னை தோற்கடித்தார். தலைவர் நல்லாட்சி, உதயசூரியன் சின்னம், பொதுமக்களின் அமோக ஆதரவு அத்தனை இருந்தும் கழகத்தின் உயர் பதவியை அனுபவித்துவரும் கல்லூர் ரவியால் நான் தோற்றுப்போய் நடுத்தெருவில் நிற்க வைக்கப்பட்டுள்ளேன்.
கட்சிக்கு துரோகம் செய்தவர் கட்சிப்பதவியில் நீடிக்கலாமா? இதைவிட மிகப்பெரிய துரோகம் வேறு ஏதாவது இருக்கிறதா? பெண்களின் பாதுகாவலரே எனக்கொரு நீதி சொல்லுங்கள். தற்போது கழகத்தின் சார்பில் கொண்டசமுத்திரம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற அண்ணன் N.E.சத்யானந்தன் தான் ஒன்றிய பெருந்தலைவர் என்று, பொதுச்செயலாளரும் வேலூர் மாவட்ட கழக செயலாளரும் வாக்குறுதி அளித்த நிலையில் தலைமையை எதிர்த்து வேறு ஒரு வேட்பாளருக்கு கல்லூர் ரவி வேலை செய்கிறார். எனவே தலைமைக் கழகத்திற்கும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருக்கும் வேலூர் மாவட்ட கழக செயலாளருக்கும் திமுகவினருக்கும் கல்லப்பாடி மஞ்சுளா ஆகிய நான் தெரிவித்துக்கொள்வது, சத்யானந்தனை ஒன்றிய பெருந்தலைவர் வேட்பாளராக வாக்குறுதி அளித்தபடி அறிவிக்கவில்லை என்றால் நாளை காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் 100 பேர் முன்னிலையில் நான் தீக்குளிப்பேன். இங்ஙனம் கல்லப்பாடி மஞ்சுளா’ என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து நாம் மஞ்சுளாவிடம் கேட்டபோது, “நான் தீவிரமான கட்சி விசுவாசி, ஆக்டிவ் கள அரசியல்வாதி. அதனாலேயே என்னை கல்லூர் ரவிக்கு பிடிக்காது. நான் போட்டியிட்ட வார்டில் சுயேச்சையாக ஒருவர் போட்டியிடுகிறார். அவர் கல்லூர் ரவிக்கு வேண்டப்பட்டவர். அவருக்கு 2 கோடி ரூபாய்க்கு காண்ட்ராக்ட் தருகிறார். அவரை வாபஸ் வாங்கு எனச்சொல்லியிருந்தால் வாங்கியிருப்பார், ஆனால் வாங்கச் சொல்லவில்லை. வாக்கு எண்ணும் மையத்தில் அவருடன் கை குலுக்குகிறார். அதை வைத்துதான் சொல்கிறேன் அவருக்கு இவர் சப்போட். என்னை தோற்கடிக்க மறைமுகமாக கூட்டுவைத்துள்ளார். இப்போது அவரை திமுகவுக்கு கொண்டுவந்து துணைதலைவர் பதவி தருகிறேன் என வாக்குறுதி தந்து அழைத்துவருகிறார் இது நியாயமா” என்றார்.
இதுகுறித்து குடியாத்தம் திமுக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, சேர்மன் பதவிக்காக துரைமுருகன் ஆதரவாளரான ஒ.செ கல்லூர் ரவிக்கும், மா.செ நந்தகுமார் எம்.எல்.ஏ ஆதரவாளரான மற்றொரு ஒ.செ சத்தியானந்தத்துக்கும் இடையே மோதல் நடக்கிறது. அந்த மோதலின் வெளிப்பாடுதான் ரவியை டேமேஜ் செய்து, சத்தியானந்தத்துக்கு ஆதரவாக மஞ்சுளாவின் மிரட்டல்போல் உள்ளது என்றார்கள்.