கரோனா தொற்று காரணமாக மரணமடைந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நரம்பியல் நிபுணர் சைமன் ஹெர்குலஸ் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அதிகாரிகளை அங்கிருந்து துரத்தியதாகவும் டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷெனாய் நகரைச் சேர்ந்த செல்வி, சுதாகர், அந்தோணி ராஜ், மணிமாறன், நிலேஷ், பாக்கியம், டில்லிராஜ், சரவணன் ஆகிய 8 பேர் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை, எழும்பூர் ஐந்தாவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன் விசாரித்தார். விசாரணையின் போது, மனுதாரர்களுக்கு எதிராகப் பொய் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாகவும், மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், வழக்கின் புலன் விசாரணை முடியவில்லை எனவும் இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் தலைமறைவாகவும், சாட்சிகளைக் கலைக்கும் அபாயம் இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைச் சுட்டிக்காட்டி, எட்டு பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளாக உள்ளவர்கள், அரசு ஊழியர்கள் என்பதால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பில்லை என நீதிபதி, தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைவரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனை தற்போது சிறை கண்காணிப்பாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், நீதிமன்றம் திறந்த பின் 10 நாட்களில் ஆஜராகி, தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும். அதுபோல, சாட்சிகளைக் கலைக்க கூடாது எனவும், நீதிமன்றம் அழைக்கும் போது ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.