Skip to main content

‘இலங்கைக்குக் கடனுதவி : ஈழத்தமிழரின் சிக்கலைத் தீர்க்க நிபந்தனை விதிக்க வேண்டும்’-ராமதாஸ்

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

 Condition should be imposed to solve the problem of Eelam Tamils

 

கரோனாவால் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது இலங்கை அரசு. மேலும் சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து வாங்கிய கடனை செலுத்த முடியாமல் இலங்கை கடுமையாகத் தவித்துக் கொண்டிருக்கிறது. இதே போல் பல்வேறு தருணங்களில் இந்தியாவுக்குத் துரோகம் செய்த இலங்கை அரசு, இம்முறையாவது நமது உதவியை பெற்றுக் கொண்டு ஆதரவாக இருக்குமா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால் கடன் வழங்கிய இந்திய அரசு ஈழத்தமிழரின் சிக்கலைத் தீர்க்க நிபந்தனை விதிக்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வரலாறு காணாத கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உணவு மற்றும் எரிபொருள் வாங்குவதற்காக ரூ. 18,090 கோடி கடன் வசதியை இந்திய அரசு வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் இம்முடிவு இராஜதந்திர நடவடிக்கை என்றாலும் கூட, இலங்கை அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இதை இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசு, இப்போது கிட்டத்தட்ட திவால் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கூட பணம் இல்லாமல் தவிக்கும் இலங்கை அரசு, இந்தியாவிடம் கடனுதவியை கோரியது. இலங்கை நிதியமைச்சரும், அதிபர் கோத்தபாயா ராஜபக்சேவின் சகோதரருமான பசில் இராஜபக்சே தில்லிக்கு வந்து கடனுதவி கோரியதைத் தொடர்ந்து  ரூ.18,090 கோடி மதிப்பிலான கடன் வசதித் திட்டத்தை இலங்கைக்கு இந்தியா அறிவித்திருக்கிறது. இது தொடக்கம் தான். வருங்காலத்தில் இலங்கைக்கு இன்னும் கூடுதலான கடனை இந்தியா வழங்கும்.

 

சீனாவின் பக்கம் சாய்ந்து கொண்டிருந்த இலங்கை அரசை இந்தியாவின் பக்கம் திருப்புவதற்கான இராஜதந்திர நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. ஆனால், கச்சத்தீவு உள்ளிட்ட நிலப்பரப்பையும், கோடிக்கணக்கில் நிதியுதவியையும் பெற்றுக் கொண்டு, பல்வேறு தருணங்களில் இந்தியாவுக்கு துரோகம் செய்த இலங்கை அரசு, இம்முறையாவது நமது உதவியை பெற்றுக் கொண்டு ஆதரவாக இருக்குமா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மாறாக, ஈழத்தமிழர்கள் தான் இந்தியாவுக்கு  எல்லா தருணங்களிலும் ஆதரவாக இருந்திருக்கிறார்கள்; இனிவரும் காலங்களிலும் ஆதரவாக இருப்பர். அதனால் தான் அவர்களை வளைக்கும் முயற்சியில் சீன அரசு அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகிறது.

 

இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த இந்த அம்சத்தைக் கருத்தில் கொண்டு,  இலங்கையை சீனாவிடம் இருந்து பிரிக்கும் நோக்குடன் கடனுதவி வழங்கும் அதே நேரத்தில், இந்தியாவுக்கு ஆதரவான ஈழத் தமிழர்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவிடம் தொடர்ந்து கடன்களையும், பிற உதவிகளையும் வாங்கிக் குவிக்கும் இலங்கை அரசு,  1987-ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட அமைதி உடன்பாட்டைத் தொடர்ந்து, இலங்கை அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 13-ஆவது திருத்தத்தின்படி, ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை  வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 35 ஆண்டுகள் ஆகியும் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் எட்டாக்கனியாகவே உள்ளது.

 

இலங்கை போரின் போதும், போருக்குப் பிறகும் ஈழத்தமிழர்களுக்கு 13-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட கூடுதலான அதிகாரங்களையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இராஜபக்சே சகோதரர்கள் உறுதியளித்தனர். ஆனால், அதன்பின் 13 ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதிகள் வெற்று வார்த்தைகளாகவே உள்ளன. இப்போதும் இராஜபக்சே சகோதரர்கள் தான் இலங்கை அதிபர், பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பதவிகளை வகிக்கிறார்கள் என்றாலும் கூட, ஒரு காலத்தில் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை.

 

ஈழத்தமிழர்களுக்கு எதிரான அநீதிகளை இந்தியா வேடிக்கை பார்க்கக்கூடாது. அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதை அண்டை நாட்டின் விவகாரம் என்று கூறி இந்தியா விலகி நிற்க முடியாது. ஏனெனில், ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதற்கான 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது இந்தியா - இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்யப்பட்டது. அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய இந்திய அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

 

உலகம் முழுவதும் உள்ள  ஈழத்தமிழர்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கவும், இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டித்து, இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தரவும் இந்தியாவைத் தான்  நம்பியிருக்கின்றனர். அந்த நம்பிக்கைக்கு இந்தியா துரோகம் செய்து விடக் கூடாது; ஈழத்தமிழர்களுக்கு உதவ வேண்டிய கடமையிலிருந்து இந்தியா விலகி விடக் கூடாது.

 

எனவே, இலங்கைக்கு முதற்கட்டமாக ரூ.18,090 கோடி கடன் வசதி அறிவித்துள்ள இந்திய அரசு, அதற்கான முதன்மை நிபந்தனையாக இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படியான அரசியல் அதிகாரங்களை குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும். போர்க்குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கும்படியும் இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் மூலம் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தையும், நீதியையும் வென்றெடுத்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.