திருச்சி மாநகரில் ஊரடங்கு காலத்தில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து கேகே நகர் ஆயுதப்படை மைதானத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
திருச்சி மத்திய மண்டலம் முழுவதும் சுமார் 20,000- க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருச்சி மாநகரில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட 6,500- க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 100- க்கும் மேற்பட்ட மூன்று சக்கர வாகனங்கள், 50- க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை மாநகர காவல்துறை வாகன உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுக்கத் துவங்கியுள்ளது.
அதன்படி, முதல் கட்டமாக கடந்த மே மாதம் 15- ஆம் தேதி முதல் மே 18- ஆம் தேதி வரையில் பறிமுதல் செய்யப்பட்டு இருந்த வாகனங்களில் முதல் கட்டமாக திருப்பிக் கொடுக்க திட்டமிடப்பட்டு, அந்தந்த வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு வாகனங்களை வந்து பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறையினர் அழைப்பு விடுத்து வருகின்றனர்.