Skip to main content

கிராமவாசியைப் பொய் வழக்கில் கைது செய்து தாக்கிய வழக்கில் இழப்பீடு!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

l

 

பாதை பிரச்சனையில் கிராமவாசியைப் பொய் வழக்கில்  கைது செய்து தாக்கி, சித்ரவதை செய்த கடலூர் ராமநத்தம் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், பெண் உதவி ஆய்வாளர் அனைவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

கடலூர் மாவட்டம், ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவருக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையில் பாதை தொடர்பாகப் பிரச்சனை இருந்து வந்தது. இந்த விவகாரம் தொடர்பாகக் கிராம பஞ்சாயத்தில் விவாதிக்கப்பட்ட போது, எதிர்தரப்பினர், கொளஞ்சியை தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்யாமல், காவல் நிலையத்திலேயே கட்ட பஞ்சாயத்து செய்துள்ளனர்.

 

இறுதியாக, கொளஞ்சியிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து பெற்ற காவல் துறையினர் வழக்கை முடித்து வைத்தனர். இதை எதிர்த்து கொளஞ்சி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை திட்டக்குடி காவல் ஆய்வாளர் விசாரிக்க உத்தரவிட்டது. அவரும் வழக்கை  முடித்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி, தெருவில் சென்று கொண்டிருந்த கொளஞ்சியை குடிபோதையில் வழிமறித்த  ராமநத்தம் காவல் உதவி ஆய்வாளர் ரங்கநாதன், தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி காவல் நிலையம் அழைத்துச் சென்று, அவரிடம் இருந்த 1,400 ரூபாயை பறித்துக் கொண்டு, பொய் வழக்கில் கைது செய்து மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர்.

 

ஆனால் கொளஞ்சியை சிறையிலடைக்க மறுத்த மாஜிஸ்திரேட், அவருக்கு சிகிச்சை வழங்க உத்தரவிட்டார். ஆனால் காவல் துறையினரின் தூண்டுதலால் சிகிச்சை வழங்கப்படவில்லை. இதையடுத்து, தன்னை சட்டவிரோதமாக கைது செய்து, தாக்கிய ராமநத்தம் ஆய்வாளர் சுதாகர், உதவி ஆய்வாளர் ரங்கநாதன், பெண் உதவி ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோருக்கு எதிராக கொளஞ்சி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

 

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன்,  கைது நடவடிக்கையின் போது உச்ச நீதிமன்ற விதிகளை பின்பற்றவில்லை எனவும், காவல் துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும்  கூறி, பாதிக்கப்பட்ட கொளஞ்சிக்கு 3 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இத்தொகையை காவல் துறை அதிகாரிகள் மூன்று பேரிடம் இருந்து தலா ஒரு லட்சம் வீதம் வசூலிக்க அரசுக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணைய உறுப்பினர், மூவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
 

 

சார்ந்த செய்திகள்