கரோனா தொற்று பரவலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அரசின் தீவிர நடவடிக்கையால் கரோனா பாதிப்புப் படிப்படியாகக் குறைந்த நிலையில் இன்று (1-ம் தேதி) பள்ளிகளில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் சென்னையில் கொரட்டூர் பகுதியில் இருவேறு கல்லூரி மாணவர்கள் கல்லூரி திறந்த முதல்நாளான இன்றே மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியிலிருந்து கொரட்டூர் செல்லும் ரயிலில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இன்று கல்லூரிகள் திறக்கப்படுவதால் சில மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாட இருப்பதாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி உட்பட மூன்று கல்லூரிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் ரயில் நிலையங்களிலும் மாணவர்கள் மோதல் போக்குகளில் ஈடுபடலாம் என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் வியாசர்பாடியில் புறநகர் ரயிலில் ஏறிய 10 கல்லூரி மாணவர்கள் அதேபோல் மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த 10 பேர் என இரண்டு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து இருதரப்பை சேர்ந்த கல்லூரி மாணவர்களும் ஓடும் ரயிலிலேயே மோதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளான நிலையில் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் மாணவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஆனால் இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.