சிதம்பரத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளி, கல்வி தந்தை சுவாமி சகஜானந்தாவால் உருவாக்கப்பட்டது. இந்த பள்ளியின் பிரதான வாயிலின் அருகில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கல்லை நட்டுவைத்து, அந்த பகுதியில் இருந்தவர்கள் வழிபட்டு வந்தனர். பின்னர், அந்த இடத்தில் சிறிய குடிசை அமைத்து, கருங்கல்லான சாமி சிலைகள் வைத்து சிறிய கோவிலாக மாற்றி வழிபட்டனர். கோவில் என்பதால் அதற்கு அப்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் கோவிலைக் கொஞ்சம் கொஞ்சமாக பெரியதாகக் கட்டினர். இதனைத்தொடர்ந்து பள்ளிக்குச் செல்லும் வாயில் அடைக்கப்பட்டது. மாணவிகள் அதிக கூட்டமாகச் செல்லும் போது நெரிசல் ஏற்பட்டு அந்த இடத்தில் விபத்தும் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அந்த கோவிலை அகற்ற வேண்டும் எனப் பள்ளி நிர்வாகம் சார்பிலும், பள்ளியின் மீது பற்று கொண்டவர்கள் சார்பிலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு, இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் மனுவும் அளிக்கப்பட்டது. அதேநேரம், கோவிலை அகற்றக்கூடாது என சுந்தரமூர்த்தி பூசாரி என்பவரும் அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனிடம் "மாணவிகள் சென்றுவரும் வழியில் கோவிலை வைத்து ஆக்கிரமித்துள்ளனர்" என மனு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக, சார் ஆட்சியர் வருவாய்த் துறையினருடன் அந்த இடம் குறித்து கலந்தாலோசித்தார். அதன்முடிவில், கோவில் அமைந்துள்ள இடம் அரசுக்குச் சொந்தமானது என்பதால், கோவிலை இடிக்க செவ்வாய்க்கிழமை சார் ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் பேரில் பொக்லைன் இயந்திரம் மூலம் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் கோவில் இடிக்கப்பட்டது. இதனை சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இதனை அறிந்த பாஜகவினர், சங்பரிவார் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர், அந்தப்பகுதியில் ஒன்று கூடி "கோவிலை இதே இடத்தில் மீண்டும் கட்டவேண்டும்; கோவிலை இடித்தது தவறு" என எதிர்ப்பு தெரிவித்து கோவில் இடித்த இடத்தில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, சங்பரிவார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கோயில் இருந்த இடத்தில் சாமி சிலைகளை எடுத்து வந்து வைத்தனர். இதற்கு காவல்துறையினர் அனுமதியளிக்காத சூழலில், காவல்துறையினரின் பேச்சை மதிக்காமல் அவர்கள் அந்த இடத்தில் சிலையை வைத்து பூஜைசெய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு, இது உங்கள் இடம் என்றால் அதற்கான ஆதாரத்தைக் கொடுங்கள் என காவல்துறையினர் கேட்ட நிலையில், பின்னர் வந்து ஆதாரங்களைத் தருவதாகக் கூறி அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.