கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்காவில் உள்ளது து.ம.புடையூர் கிராமம். இந்த கிராமத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மக்கள் குறை மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் பிரச்சனைகளை தீர்க்கக் கோரி மனு கொடுத்தனர். சில பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நிவாரண உதவிகளை வழங்கி கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
அந்த நேரத்தில் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தில் அருகே அந்த கிராமத்திற்கு தண்ணீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்றின் மீது சிலர் ஏறி கருப்புக்கொடி காட்டி கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் போராட்டம் அங்கிருந்த அதிகாரிகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்புக்கு இருந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் தயாபேரின்பன் மற்றும் நிர்வாகிகள் வீர ராஜன் முருகானந்தம், கோடீஸ்வரன், கலியன் ஆகிய நால்வரும் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து வேப்பூர் தீயணைப்புத் துறையினர் ராமநத்தம் போலீசார் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் திட்டக்குடி அருகில் உள்ள நாவலூர் கிராமத்தில் உள்ள ஏரியில் ஆக்கிரமிப்புகள் உள்ளன அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகீர்த்தி விஸ்வநாதன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைவில் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கீழே இறங்கி வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.