திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக கோரையாற்றில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்துவருகிறது. அதன் காரணமாக, எடமலைப்பட்டிபுதூர் கோரையாற்றின் கரைப்பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனை இன்று (27.11.2021) மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து, திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளான எடமலைப்பட்டிபுதூர் காந்தி நகர், டோபி காலனி, உறையூர் பெஸ்கி நகர், ஏ.யு.டி நகர், லிங்கம் நகர், மணிகண்டம் ஒன்றியம் தீரன்நகர் உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். மேலும், அங்கு சூழ்ந்துள்ள மழைநீரினை அகற்றிடவும், உரிய பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், மணிகண்டம் ஒன்றியம் இனியனூர் அரியாற்றில் மழையினால் குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ளம் சூழ்ந்திருப்பதைப் பார்வையிட்டு, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மற்றும் மாநகராட்சி, நீர்வள ஆதாரத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.