
சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சிறுமி கொலை தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் வசிக்கக்கூடிய பகுதியான சிவானந்தபுரம் பகுதியிலேயே ஒரு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரலது உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அந்த சிறுமியின் குடும்ப நண்பராக இருந்த முத்துக்குமார் என்பவரால் கொலை செய்யப்பட்டு மூட்டையில் கட்டி வீசிய தகவல் கிடைத்துள்ளது.
கோவையில் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு புதரில் மூட்டைக் கட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் குடும்ப நண்பரே கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள சிவானந்தபுரம் யமுனா நகரில் தூய்மைப்பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, புதர் ஒன்றில் மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீச அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி காவல்துறையினர், விசாரணை நடத்தினர். அதில் மூட்டையில் சடலமாக இருந்தது 15 வயதுடைய சிறுமி என்பது தெரியவந்தது. மேலும், அச்சிறுமியைக் கடந்த 11ஆம் தேதிமுதல் காணவில்லை எனக் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அச்சிறுமியின் வீட்டார் புகார் அளித்திருந்தனர் என்பதும் உறுதி செய்யப்பட்டது. உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (17.12.2021) காலை அச்சிறுமியின் குடும்ப நண்பரான முத்துக்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் முத்துக்குமார், 4.25 கிராம் நகைக்காகச் சிறுமியைக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று இதுகுறித்துப் பேசிய துணை கமிஷனர் உமா, “முத்துக்குமாரை தற்போது கைது செய்துள்ளோம். முத்துக்குமார் அந்தப் பெண்ணைக் கொலை செய்ததற்கு முக்கிய காரணம், அவருக்கும் அவர் வீட்டாருக்கும் தங்கநகை கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இதில், 4.25 கிராம் தங்கத்தைத் திருப்பிக் கொடுக்காத காரணத்தினால் இந்தக் கொலையை செய்ததாக முத்துக்குமாரை நாங்கள் கைது செய்துள்ளோம்.
புலன்விசாரணை நடந்துவருகிறது. போஸ்ட்மார்ட்டம் முடிவு வந்த பின்புதான் அவர் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டாரா என்பது குறித்து தெரியவரும். தற்போது ஆதாயக் கொலை என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக பல்வேறு செல்ஃபோன்களை ஆய்வுசெய்து முத்துக்குமாரை கைது செய்துள்ளோம். பள்ளிகளில் விழிப்புணர்வு எடுத்துவருகிறோம். குழந்தைகள் வழக்கு அனைத்தும் அனைத்து மகளிர் காவல் நிலையம் கிழக்கில் பதிவு செய்யப்படுகிறது. கொல்லப்பட்ட சிறுமியின் வீட்டிற்கும் அந்த உடல் இருந்தது இடத்திற்கும் 150 மீட்டர் தூரம் மட்டுமே தொலைவு” என தெரிவித்தார்.