கோவை மாவட்டத்தில் உள்ள விமானப்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு சென்ற பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சக அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 30 அதிகாரிகள் பயிற்சி பெறும் பொருட்டு கோவை மாவட்டத்தில் உள்ள விமானப்படை பயிற்சிக் கல்லூரிக்கு வந்துள்ளனர். இதில் டெல்லியைச் சேர்ந்த லெப்டினன்ட் பெண் அதிகாரி ஒருவரை சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சக விமானப்படை அதிகாரியான லெப்டினன்ட் அமிர்தேஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, இது தொடர்பாக, பயிற்சி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, அந்த பெண் அதிகாரி கோவை மாவட்ட காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விசாரணை நடத்திய காவல்துறையினர், பெண் அதிகாரியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான லெப்டினன்ட் அமிர்தேஷை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.
அப்போது, லெப்டினன்ட் அமிர்தேஷின் தரப்பு வழக்கறிஞர், விமானப்படை அதிகாரியை கைது செய்ய காவல்துறையினருக்கு அதிகாரமில்லை என்று கூறி பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார். இது தொடர்பாக, பதிலளிக்க காவல்துறை அவகாசம் கேட்டதையடுத்து, விமானப் படை அதிகாரியை ஒருநாள் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அதிகாரியை உடுமலைப்பேட்டைக் கிளை சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, கோவை காவல்துறை நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் எனவும், துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என விமானப்படைப் பயிற்சி கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.