ஆடி மாதப் பிறப்பையொட்டி, கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற தேங்காய் சுடும் பண்டிகை, வீடுகள் தோறும் களைகட்டின.
ஆடி மற்றும் மார்கழி மாதங்களில் திருமணம், புதுமனை புகுதல், புதிய வணிகம் உள்ளிட்ட புதிய தொடக்கங்களை இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்வதில்லை. புதுமணத் தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகவும் ஆடி மாதம் உள்ளது.
இப்படி ஆடியைப் பற்றி வெவ்வேறு நம்பிக்கைகள், கற்பிதங்கள் விரவிக் கிடந்தாலும், ஆடி மாதத்தில்தான் அம்மன் கோயில்களில் விழாக்கள் களைகட்டுகின்றன. வணிக நிறுவனங்கள் ஆடி தள்ளுபடி என விசேஷ சலுகைகளும் வாரி வழங்குகின்றன.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஆடி மாதப் பிறப்பை 'தலையாடி' என்ற பெயரில் கொங்கு மண்டல மக்கள் தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். ஆடி மாதம் முதல் தேதியை குறிக்கும் வகையில் 'தலை ஆடி' என்கிறார்களே தவிர, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்கும் தலையாடிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.
தலையாடியின் முக்கிய அம்சமே தேங்காய் சுடுதல் பண்டிகைதான். தேங்காய் சுடுதல்தானே என்று லேசில் கடந்து போய் விடமுடியாது. இதன் பின்னணியில் நிறைய மெனக்கெடல்களும், சில தாத்பரியங்களும் இருக்கின்றன.
இந்த பண்டிகைக்காக கடைகளிலோ, தோப்பில் இருந்தோ நன்றாக திரண்ட தேங்காயை வாங்கி வந்து, குடுமி உள்பட நார் பகுதிகளை அகற்றிவிட வேண்டும். தேங்காயில் இருக்கும் முக்கண்ணில், ஒரு கண்ணில் துளையிட்டு தேங்காயில் இருக்கும் நீரை வெளியேற்ற வேண்டும். பின்னர் அந்தத் துளை வழியாக, பச்சை அரிசி, பாசி பருப்பு, அவல், எள், வெல்லம், ஏலக்காய் மற்றும் தேவையைப் பொருத்து பொட்டுக்கடலை ஆகியவற்றை உள்ளே செலுத்த வேண்டும். இதை அப்படியேயும் பயன்படுத்தலாம். அல்லது அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து தூளாகவும் தேங்காயினுள் செலுத்தலாம். இந்தப் பொருள்கள் வேக வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே வெளியேற்றி வைத்திருக்கும் தேங்காய் தண்ணீரையும் உள்ளே ஊற்றிக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து, அழிஞ்சி மரக்குச்சியை ஈட்டி போல கூர்மையாக சீவி, அதை தேங்காயின் ஏற்கனவே திறந்த ஒரு கண்ணில் செலுத்தி, திறந்தவெளியில் அடுப்பை மூட்டி அதில் வேகவைத்து எடுக்க வேண்டும். வீடுகள்தோறும் குழந்தைகள், பெரியவர்கள் நீளமான அழிஞ்சி மரக்குச்சியில் தேங்காயை சொருகி, நெருப்பில் காட்டி சுடுவதை அலாதி அனுபவமாக கொண்டாடுகின்றனர்.
அதற்கு முன்னதாக, தேங்காயின் வெளிப்புறத்தில் மஞ்சள், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். பதினைந்து நிமிடங்களில் தேங்காய் வெந்து விடும். அதையடுத்து, அந்த தேங்காயை கடவுள் முன்பு வைத்து படைத்த பிறகு, அனைவரும் பங்கிட்டு உண்பார்கள். தேங்காயின் உள்ளே செலுத்திய பூரணம் நன்றாக வெந்து கிட்டத்தட்ட சர்க்கரை பொங்கல் போல சுவையாக இருக்கும்.
நாம் விசாரித்தவரை, தேங்காய் சுடும் பண்டிகையின் பின்னணி வரலாறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதேநேரம், பாரதப் போருடன் இதை முடிச்சிட்டு சொல்கிறார்கள். அதாவது, மகாபாரதப் போர் 18 நாள்கள் நடந்தது. ஆடி 1ல் தொடங்கி 18ம் தேதி போர் முடிவுக்கு வந்தது. தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான போராக பாரத போர் பார்க்கப்பட்டது. தர்மம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, மக்கள் தேங்காயை சுட்டு கடவுளுக்கு படைத்தார்கள் என்று ஒரு கதை சொல்லப்படுகிறது.
இன்னொரு பேச்சும் உலா வருகிறது.
ஜூன், ஜூலை மாதங்களில் பருவமழைக் காலம் என்பதால் எல்லா நீர்நிலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆடிப்பட்டத்தை தேடி விதைக்க காத்திருக்கும் உழவர்கள், இயற்கையாக விளைந்த தேங்காய், அரிசி, பருப்பு, எள் உள்ளிட்ட தானியங்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒன்றாக கலந்து தேங்காய்க்குள் போட்டு, நெருப்பில் சுட்டு கடவுளிடம் வைத்து வழிபட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
தேங்காய், அரிசி, பருப்பு, எள், அவல், ஏலக்காய், பொட்டுக்கடலை என பல சரக்கும் கூட்டணியாக சேரும்போது அதன் சுவை புது தினுசாக இருக்கிறது. எனினும், இந்த கூட்டணிக்கு தேங்காய்தான் ஒற்றைத் தலைமை. உழவடைப் பணிகள் சிறப்பாக இருக்க, இயற்கை துணை நிற்க வேண்டும் என்பதற்காக இத்தகைய வழிபாட்டு முறைகளை தமிழர்கள் கையாண்டதாகச் சொல்கின்றனர்.
என்றாலும், தேங்காய் சுடும் பண்டிகை சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை உள்ளிட்ட காவிரி கரையையொட்டி உள்ள கொங்கு மண்டல மக்களிடம் மட்டுமே இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒரு காலத்தில், தலையாடி என்றாலே வீட்டுக்கு வீடு கொண்டாடப்பட்டு வந்த தேங்காய் சுடும் பண்டிகை, டிஜிட்டல் யுகத்தில் இந்த வழக்கமும் வெகுவாக அருகி விட்டது.
விறகு அடுப்பில் சுடுவதற்கு பதிலாக காஸ் அடுப்பில் வைத்தும் தேங்காய் சுடுகின்றனர். இப்படி பூரணத்துடன் கூடிய சுட்ட தேங்காய்க்கு தனி சுவை இருப்பதால், சூப்பர் மார்க்கெட்டுகளிலும், சின்னச்சின்ன மளிகைக் கடைகளிலும் ரெடிமேட் ஆக சுட்ட தேங்காய்கள் விற்பனை செய்யத் தொடங்கி விட்டனர்.
நெருப்பில் சுட்ட தேங்காய்க்கு சுவை அதிகம்தான். ஒருபோதும், 'சுட்ட' தேங்காய்க்கு அல்ல.