கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கிராமத்தில் செயல்பட்டுவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் அப்பகுதியில் உள்ள கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசு கடன் வழங்குவதோடு பொதுமக்கள் இந்த கிராம கூட்டுறவு வங்கியில் வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர். இதன் செயலாளராக உள்ளவர் மணிமாறன்.
இவர், சங்கத்தில் உறுப்பினர் அல்லாத நபர்கள் மற்றும் இறந்து போனவர்கள் பெயர்களில் கடன் வழங்கப்பட்டு அதன் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு செய்திருப்பதாக கூறி நேற்று முன்தினம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சங்கத்தின் முன்பு திட்டக்குடி சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் கணேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள், சி.பி.எம், சி.பி.ஐ. ஆகிய கூட்டணி கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேடு குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். கிராம கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.