
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் 08/12/2021 பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டது. நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு. இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் பெங்களூரில் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று ராணுவ மரியாதைக்கு பின் 13 பேரின் உடலும் டெல்லி எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், இன்று உதகையில் கடையடைப்பு கடைபிடிக்கப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று உதகை, கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் மாலை 6 மணி வரை கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 13 பேர் உடலை சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு சென்றபோது பொதுமக்கள் ஆங்காங்கே திரண்டு மலர்தூவி ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.