புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் காலராவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் இணைநோய்களால் உயிரிழந்தனர். காலரா பாதிப்புள்ள இரண்டு பேரில் ஒருவருக்கு புற்றுநோய், மற்றொருவருக்கு உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு இருந்தது. நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைய வேண்டாம். காரைக்காலில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காலரா பரவல் எதிரொலியாக காரைக்காலில் உள்ள உணவகங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. குறிப்பாக உணவகங்களில் கொதிக்க வைக்கப்பட்ட அல்லது ஆர்.ஓ முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே வழங்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்யப்பட வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களிலும் கொதிக்க வைக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாதவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144 (2)- கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காலரா பரவல் பாதிப்பு காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி, கல்லூரிகளில் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய உள்ளதால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.