![chit funds rs 15 crores police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/m2LdxukntT8sehU_XRh6qGbMJBDOGzOXYICzF_kua9Y/1643077120/sites/default/files/inline-images/money4344.jpg)
ஏலச்சீட்டு முதலீட்டுத் தொகை 15 கோடி ரூபாயை சுருட்டிய வடமாநில நிதி நிறுவன அதிபர், முதலீடு செய்தவர்கள் மீதே காவல்துறையில் புகார் அளிப்பேன் என்று நோட்டீஸ் அனுப்பி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் செவ்வாய்பேட்டையில் ராஜஸ்தான், பீஹார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பலர் மளிகை, பிளாஸ்டிக் பொருள்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், பேன்சி பொருள்கள் உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரம் குறிப்பிட்ட சில வட இந்திய குடும்பத்தினர் ஏலச்சீட்டு நிறுவனம் உள்ளிட்ட நிதி நிறுவன தொழில்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்பேட்டை வெங்கடப்பன் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த பத்து ஆண்டுகளாக ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய பூர்வீகம், ராஜஸ்தான் மாநிலம் ஆகும்.
பிரகாஷிடம், அப்பகுதியில் வசிக்கும் ராஜஸ்தானிய குடும்பத்தினர், உள்ளூர்க்காரர்கள் என 150- க்கும் மேற்பட்டோர் சீட்டு திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர். சீட்டு திட்டம் முதிர்வு அடைந்த பிறகும் கூட முதலீட்டாளர்களுக்கு அவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை எனத்தெரிகிறது. பணம் கேட்பவர்களுக்கும் அவர் முறையான பதில் சொல்லாமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
நாளுக்குநாள் முதலீட்டாளர்களிடம் இருந்து நெருக்கடி அதிகரித்த நிலையில், அவர் தரப்பில் இருந்து முதலீட்டாளர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அதில், ''தன்னிடம் ஏலச்சீட்டில் முதலீடு செய்தவர்க்கு உரிய லாபத்துடன் முதிர்வுத்தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டேன். தற்போது கந்து வட்டி ரீதியில் பணம் கேட்டு மிரட்டுகிறீர்கள். உங்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும்,'' என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த நோட்டீஸைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள், திங்கள்கிழமை (ஜன. 24) காலையில் சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர்.
புகார் குறித்து முதலீட்டாளர்கள் கூறுகையில், ''ராஜஸ்தானைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் நடத்தி வரும் ஏலச்சீட்டு திட்டத்தில் 150- க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளோம். பத்து லட்சம் ரூபாய், இருபது லட்சம் ரூபாய் சீட்டு திட்டங்களை அவர் நடத்தி வந்தார்.
நாங்கள் செலுத்திய பணத்தைக் கொண்டு அவர் சேலம், அந்தியூர், ஈரோடு ஆகிய இடங்களில் ஏராளமான அசையா சொத்துகளை வாங்கிப் போட்டுள்ளார். முதிர்வடைந்த பின்னரும் எங்கள் தொகையைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். இதுவரை அவர் சுமார் 15 கோடி ரூபாய் வரை முதலீட்டுத் தொகையை மோசடி செய்திருக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.