சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2010- ஆம் ஆண்டு ஜூலை 27- ஆம் தேதி மூக்கன் என்ற முருகன் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக விராலிமலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம், மூக்கன் என்ற முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, 2016- ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு எதிராக, மூக்கன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மூக்கன் சார்பில் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதி சஞ்ஜிப் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (22/11/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது மூக்கன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனைகள் தங்கள் தரப்புக்குச் சாதகமாக வந்துள்ளது. ஆகவே, மூக்கனை வழக்கில் இருந்து விடுவித்து தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், டி.என்.ஏ. பரிசோதனையின் போது சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் ஏதேனும் தவறுகள் இருந்திருக்கலாம். எனவே, அதனை குற்றத்தில் இருந்து தப்பிக்கப் பயன்படுத்த முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்பட்ட காயங்கள், மருத்துவ அறிக்கைகள், சாட்சியங்கள், தந்தையின் வாக்குமூலம் என அனைத்தும் குற்றவாளிக்கு எதிராக இருப்பதை உறுதி செய்திருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஆகவே, மூக்கனின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுக்கால சிறைத் தண்டனையை உறுதி செய்தனர்.