அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகில் உள்ளது நல்லூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள ஈ.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் அழகுதுரைக்கும் (26) கடந்த 16.6.2021 அன்று கீரனூர் திரௌபதி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. 18 வயது நிரம்பாத சிறுமிக்கு நடைபெற்ற திருமணம் சட்டப்படி தவறு எனக்கூறி இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலருக்கு சம்பந்தப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவர் தகவல் அனுப்பியுள்ளார்.
இந்த தகவலை அடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் அன்பரசி, திட்டக்குடி காவல் நிலையத்தில் சிறுமிக்கு நடந்த திருமணம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் திருமணம் செய்துவைத்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி, இளையபெருமாள், குணசேகரன் ஆகியோர் சிறுமிக்குத் திருமணம் செய்துவைத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். சிறுமியைத் திருமணம் செய்த அழகுதுரை, திருமணம் முடிந்த சில நாட்களிலேயே சிறுமியை தனது பெற்றோரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றது தெரியவந்துள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போலீசார், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பரசி ஆகியோர் ஆலோசனைகள் நடத்திவருகின்றனர். 18 வயதுக்கு முன் சிறுமிக்குத் திருமணம் செய்துவைத்தது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் இதுபோன்ற பெற்றோர்கள் தங்கள் உறவுமுறை விட்டுப்போகக்கூடாது என்றும் சொத்து, சுகங்கள் வேறு யாருக்கும் போகக் கூடாது என்ற சுயநல நோக்கத்திலும் இப்படிப்பட்ட திருமணங்களை நடத்துகின்றனர். இதனால் படித்து வாழ்க்கையில் முன்னேறி பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று கனவு காணும் பெண் பிள்ளைகள் பாதிப்படைகிறார்கள். இதனால் அவர்களது வாழ்க்கை இளமையிலேயே கருகிப் போகிறது.