இன்று (12.06.2021) காலை 11.33 மணி அளவில் மேட்டூர் அணையை டெல்டா பாசனத்திற்காக மலர்தூவி திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் வருகை புரிந்திருந்தனர். முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிமுதல் 10 ஆயிரம் கன அடிவரை நீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையைத் திறந்துவைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், ''மேட்டூர் அணை நீர் மூலம் சுமார் 5.2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். நான் முன்வைத்த 7 அம்ச திட்டங்களில் குடிநீருக்கு முக்கியத்துவம் அளித்திருந்தேன். காவிரி டெல்டாவில் சாகுபடி பரப்பை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதே அரசின் நோக்கம். கடைமடைவரை நீர் செல்வதை உறுதிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 647 இடங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன விவசாய இடுபொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். மேட்டூர் அணையை ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி திறந்துவைப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
தமிழகத்தில் கரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. படுக்கை வசதி தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவை இருந்த நிலையில், தற்போது அவை எல்லாம் இல்லாமல் பிரச்சினை இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிவது போன்றவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனால் கெஞ்சி கூட கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.