Skip to main content

முதலமைச்சர் தூத்துக்குடி விசிட்! மக்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி..!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

இந்த வருடம் வடகிழக்குப் பருவமழை முன்பைக் காட்டிலும் தமிழ்நாடு முழுக்க வெளுத்து வாங்கியதில், மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்திவருகிறார்.

 

கடற்கரை நகரமான தூத்துக்குடியும் வெள்ளத்திற்குத் தப்பவில்லை. நகரின் ரஹ்ம்த் நகர் நீதிமன்றம், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை. ஏற்கனவே இங்கு ஆய்வுசெய்த தொகுதி எம்.பி.யான கனிமொழியும் வெள்ள நிவாரணப் பணிகளை அதிகாரிகளைக் கொண்டு விரைவுபடுத்தினார். இந்த நிலையில் தூத்துக்குடியின் வெள்ளப் பகுதி பாதிப்புகளை ஆய்வு செய்யவும் மக்களைச் சந்திக்கவும் முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று (02.12.2021) மதியம் 1.45 மணிக்கு தூத்துக்குடி வந்தார். அவருடன் எம்.பி. கனிமொழி, சபாநாயகர் அப்பாவு, தொகுதி எம்.எல்.ஏ.வும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன், அனிதா ராதகிருஷ்ணன், அமைச்சர் நேரு மற்றும் மார்க்கண்டேயன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் சென்றனர்.

 

நகரின் பிரையண்ட் நகரில் பாதிக்கப்பட்ட 1, 2ஆம் தெருக்களில் நடந்து சென்று ஆய்வுசெய்த முதல்வரிடம் அந்தப் பகுதி மக்கள் மழையின் பொருட்டு தங்களின் இன்னல்களைத் தெரிவித்தனர். அதனை நிவர்த்தி செய்வதாக முதல்வர் தெரிவித்தார். பின்னர் அப்பகுதி நிலைமைகளை கலெக்டர் செந்தில்ராஜிடம் கேட்டறிந்த முதல்வர், நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும்படி கேட்டுக்கொண்டார். அதன் பின் மாநகராட்சியில் கமிஷ்னர் சாருஸ்ரீ, வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியான சி.ஜி. தாமஸ் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைள் பற்றி ஆலோசனை செய்த முதல்வர், தொடர்ந்து உரிய நடிவக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

ரஹ்மத் நகர், அதன் பின் வெகுவாகப் பாதிக்கப்பட்ட முத்தம்மாள் காலனி பகுதியின் வெள்ளப் பாதிப்புகளை நடந்து சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலினிடம் அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து, ‘கடந்த பல ஆண்டுகளாகப் பெய்த, ஒவ்வொரு மழைக்காலத்தின்போதும் இந்தக் காலனியில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. சாலைகளும் வெள்ளக்காடாகிவிடுகிறது. நாங்கள் அன்றாட வாழ்க்கையின் பொருட்டு வெளியே வரமுடியாத நிலைதான் ஏற்படுகிறது’ என்று முதல்வரிடம் தெரிவித்து மக்கள் அளித்த கோரிக்கையைப் பெற்ற முதல்வர், இனி அப்படி நடக்காதவாறு நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்தார். இதனையடுத்து எட்டயபுரம் சாலையில் உள்ள மண்டபத்திற்குச் சென்ற முதல்வர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பாய், உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். அனைத்து துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், நகரின் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்