Skip to main content

ஏழு தமிழர் விடுதலையை அறிவிக்க தமிழக முதலமைச்சர் உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி உறுதிசெய்யவேண்டும் - கருணாஸ் 

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
kovai

 

தமிழ்நாடு ஆளுநர் வழியாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி ஏழு தமிழர் விடுதலையை அறிவிக்க தமிழக முதலமைச்சர் உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி உறுதிசெய்யவேண்டும் எம்.எல்.ஏ. கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
 இது குறித்த அவரது அறிக்கை:   ‘’முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில்முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

 

 தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

 மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து அரசு உரிய முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது. இதைத்தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் 7 பேரின் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அவர்களின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

 

இந்நிலையில்தான் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன்சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு 6.9.2018 இன்று வழங்கியுள்ளது.

 

7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

ஏற்கெனவே இவ்வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமஸ், தங்களது தீர்ப்பில் சட்ட அறியாமை என்ற பிழை நிகழ்ந்துள்ளதை ஏற்றுக் கொண்டு, ஏழு தமிழர்களையும் விடுதலை செய்து விடலாம் என்று வெளிப்படையாகப் பலமுறை கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

 

 கொலையுண்ட ராஜீவ் காந்தியின் மகன் இராகுல் காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், இவர்களை விடுதலை செய்வதில் தமக்கு மறுப்பேதுமில்லை என்று தெரிவித்து விட்டனர்!

இந்த நிலையில், உச்ச நீதிமன்றமே ஏழு தமிழர் விடுதலையை அறிவித்திருக்க முடியும். ஆனால், இந்திய அரசின் கருத்தை அது கேட்டது! இந்திய அரசோ, ஏழு தமிழர் விடுதலையை ஏற்க முடியாது என குடியரசுத் தலைவர் வழியாக அறிவித்துவிட்டது. ஆனால் காலம் கடந்தாலும் இப்போது உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அந்த விடுதலை வாய்ப்பை வழங்கியுள்ளது.

 

 இச்சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமனமான தீர்மானத்திற்கும், அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட சட்டமன்றத் தீர்மானங்களுக்கும், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்கும் மதிப்பளிப்பதாக இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு முன்னால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது! அது அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 ஆகும்! இதை உச்சநீதிமன்ற எடுத்துரைத்துவிட்டது!

 

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தனது அமைச்சரவையைக் கூட்டி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதாகத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநர் வழியாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி அறிவிக்க வேண்டும். ஏழு தமிழர்களை விடுதலை செய்யவேண்டும்.’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தினம் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பதே அவரின் திட்டம்'-கருணாஸ் பரப்புரை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'His plan is to lie 10 days a day' - Karunas lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் தலைவர் கருணாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், ''தமிழ்நாட்டுக்காரர்கள் கேனையர்கள் கிடையாது. மக்கள் மீது அதிகாரத்தை திணிப்பது தான் பாஜகவின் அரசியல். சமூக நீதி மறுப்பதுதான் சனாதனம். தமிழ்நாட்டில் சமூக நீதி என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது எங்கெல்லாம் மறுக்கப்படுகிறதோ அதுதான் சனாதனம். ஆண்டாண்டு காலமாக கீழடியில் நமது வரலாற்றை பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது. அப்படிப்பட்ட நம் தாய்மொழி தமிழ் மொழி திட்டமிட்டு பாஜகவால் அழிக்கப்படுகிறது. மக்களுக்கான எந்தச் செயலையும் செய்யாமல் தினமும் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பது பிரதமரின் செயல்பாடு அவருடைய திட்டம்'' என்றார்.

Next Story

‘துரோக அதிமுக; பாசிச பாஜக; இதுதான் சரியான நேரம்’ - கருணாஸ் எடுத்த முடிவு

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
'Treacherous AIADMK; Fascist BJP'; This is the right time' - Karunas decided

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திமுகவும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதேநேரம், பாஜக கூட்டணியில் தற்போது வரை ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரசுக்கு சீட்டு ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், திமுக கூட்டணிக் கட்சிக்கு ஆதரவளிக்க இருப்பதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 'மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி இந்தியாவில் மத நல்லிணக்கம் மாண்புற, சமூக நீதியைக் காக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். தமிழ்நாட்டில் அடிமை துரோக கட்சியான அதிமுகவை தேர்தலில் தோற்கடிக்க நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பு. பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் அணியாக இணைய வேண்டியிருக்கிறது. பாஜக வென்றால் மோடி ஆட்சி இந்திய கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக் கூடாரமாக மாறிவிடும். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.