தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு வருகிறார். இரண்டு நாள் பயணமாக டெல்டா பகுதிகளுக்கு வந்திருக்கும் அவர், நேற்று முதல் நாள் ஆய்வில் தஞ்சாவூர் மற்றும் நாகை மாவட்டங்களைப் பார்வையிட்டார். இன்று 2-வது நாளாக மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய அவர் வந்தபோது, அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை முதல்வரின் பாதுகாப்புப் படையை சேர்ந்த காவலர் ஒருவர் நெஞ்சில் கை வைத்து தள்ளிக்கொண்டே செல்லும் சம்பவம் நடந்தது. அவர் பத்திரிகையாளர் என்று கூறியும், அடையாள அட்டையைக் காட்டியும், அதனைக் கண்டுகொள்ளாமல் அந்த காவலர் முரட்டுத்தனமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த பத்திரிகையாளர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த தகவல் சமூக ஊடகங்கள் மூலம் வேகமாகப் பரவிவருகிறது. இது குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் உடனடியாக அந்த காவலரை மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதனை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் அவரை முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்து நீக்கம் செய்து வேறு பணிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.