உச்சநீதிமன்றம் விடுதலை செய்தியை வெளியிட்ட பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன் குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் விருந்தினர் அறையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (18/05/2022) மாலை 05.00 மணியளவில் பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, பேரறிவாளனை கட்டியணைத்து வரவேற்ற முதலமைச்சர், அவரை தனது இருக்கைக்கு அருகில் அமர வைத்து சிறிது நேரம் பேசினார். தனது விடுதலைக்காக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நன்றித் தெரிவித்து முதலமைச்சரிடம் பேரறிவாளன் வாழ்த்துப் பெற்றார்.
இந்த நிகழ்வின் போது, அமைச்சர் துரைமுருகன், அரசு உயரதிகாரிகள், பேரறிவாளன் குடும்பத்தினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலைச் செய்து தீர்ப்பு வெளியான உடனே பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசியதோடு, வாழ்த்துத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.