சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் இன்று (05/07/2022) காலை 11.00 மணியளவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நான் படித்த மாநில கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநில கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் வாழ்த்த வந்துள்ளேன். சீனியர் என்ற முறையில் மாணவர்களை வாழ்த்த வந்திருக்கிறேன். மாநில கல்லூரியில் அரசியல்- அறிவியல் படித்தேன். மிசா சட்டத்தில் சிறையில் இருந்த போது, காவல்துறை பாதுகாப்புடன் கல்லூரி தேர்வு எழுதினேன்.
சமூகநீதி கல்லூரியாக மாநில கல்லூரி திகழ்கிறது. கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து. கல்வியைக் கட்டாயமாக்கி அதனை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறோம். கல்வியைக் கடல் என்று சொல்வார்கள்! கடலோரத்தில் இருக்கும் கல்லூரி மாநில கல்லூரி. குளிரும், தென்றலும், குளுமையும், இனிமையும் கலந்த சூழலில் இருக்கும் மாநிலக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு என்பதே மிகப்பெரியது. சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே தொடங்கப்பட்ட கல்லூரி, மாநில கல்லூரி.
மாநிலக் கல்லூரி தொடங்கப்பட்டு, 14 ஆண்டுகளுக்குப் பிறகே சென்னை பல்கலைக்கழகமே தொடங்கப்பட்டது. விளிம்பு நிலை மக்கள் அதிகம் படிக்கும் கல்லூரி, மாநில கல்லூரி. மாநில கல்லூரியாக இருந்தாலும், மாநில கல்லூரிப் பல்கலைக்கழகம் போலச் செயல்பட்டு வருகிறது. மாநில கல்லூரியில் 2000 பேர் அமரும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கம் அமைக்கப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மாநில கல்லூரி வளாகத்திலேயே விடுதி அமைக்கப்படும். பெண்கள் படிக்க வேண்டும்; பட்டங்களை பெற வேண்டும்; தகுதிக்கேற்ற வேலைக்கு செல்ல வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன்னால் கல்வி கற்றவர்கள் விழுக்காடு என்ன? இப்போது என்ன? என்று பார்த்தால் 'திராவிட மாடல்' புரியும்" எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அரசு உயரதிகாரிகள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.