தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு (03.06.2021) அன்று மதுரையில், ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம்’ அமைக்கப்படும் என அறிவித்தார். ஆளுநர் ஆர்.என்.ரவியும் 21.06.2021 அன்று சட்ட மன்ற பேரவையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தார். கலைஞர் நினைவு நூலகம் அமையவுள்ள மதுரை நத்தம் ரோட்டில் இருக்கும் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தை கடந்த அக்டோபர் மாதம், முதலமைச்சர் நேரடியாக வந்து பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறையால் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டின் படி, நிர்வாக ஒப்புதல் ரூபாய். 114.00 கோடி அரசால் வழங்கப்பட்டது. இவற்றில் ரூபாய். 99.00 கோடி கட்டுமானப் பணிக்கும், ரூபாய்.10.00 கோடி புத்தகங்களுக்கும், ரூபாய். 5.00 கோடி கணினி உபகரணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் நினைவு நூலகம் 2.70 ஏக்கர் பரப்பளவில் ஒன்பது தளங்களாக அமையவுள்ளது. தரை தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் ஏழுதளங்கள் மேலும் இக்கட்டடத்தில் மாற்றுத்திறனாளிக்கான பிரிவு, மாநாட்டு கூடம், குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், ஒளி மற்றும் ஒலி தொகுப்புகள் காட்சியகம், பார்வையற்றோர்களுக்கான மின் நூல், ஒலி நூல், பார்வையாளர் உணவருந்தும் அறை உள்ளடங்கியது.
மேற்கண்ட கட்டடத்தில் தமிழ் மொழி நூல்கள், பார்வையற்றோர் மற்றும் ஒலி நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், பொது அறிவு நூல்கள், குழந்தைகள் நூல்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம், கணினி அறிவியல், நூலக அறிவியல், கணிதம், இயற்பியல் மற்றும் வானுடவியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிர்நுட்பவியல், நிலவியல், வேளாண்மை, சுற்றுப்புற சூழல், உணவியல், ஆராய்ச்சி, தத்துவம், உளவியல், மதம் மற்றும் நெறிமுறை, சமூகவியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், இலக்கியம், மேலாண்மை, வரலாறு மற்றும் புவியியல், சுயசரிதை, பயணம் மற்றும் சுற்றுலா, சட்டம், மருத்துவம், பொறியியல், நுண்கலை, சமூக அறிவியல், பருவ இதழ்கள் மேற்கண்ட பிரிவுகளைச் சார்ந்த மொத்தம் 2.50 இலட்சம் புத்தகங்கள் வைக்கப்படவுள்ளது.
கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிக்காக இன்று (11/01/2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இக்கட்டடம் 12 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.