Skip to main content

15 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் கலைஞரின் தீர்மானம்... நிறைவேற்றுமாறு கோரிக்கை வைத்த ராமதாஸ்!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

"Chief Justice of the Supreme Court gives confidence: Action is needed to declare Tamil as the official language of the High Court" - Ramadas

 

நவம்பர் மாதம் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா கொண்டாடப்பட்டது. அதன்படி டெல்லியில், உச்ச நீதிமன்றம் பதிவுத்துறையின் சார்பிலும் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, “உள்ளூர் மொழி அதிக அளவில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்தும் நீதி வழங்குவதற்கான ஒட்டுமொத்த நடைமுறையையும் எளிதாக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். 

 

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இந்தியாவிலுள்ள உயர் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை உறுதிசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் என்.வி. இரமணா கேட்டுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் தலைமை நீதிபதியின் பேச்சு நம்பிக்கையளிக்கிறது.

 

தில்லியில் உச்ச நீதிமன்ற பதிவுத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய தலைமை நீதியரசர் என்.வி. இரமணா, “உயர் நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள், வழக்காடும் மொழி, அதிக வழக்குச் செலவு ஆகியவை தான் நீதிமன்ற அமைப்பிலிருந்து சாதாரண மக்களை அந்நியப்படுத்துகின்றன. இந்நிலையை மாற்ற தவிர்க்கப்பட வேண்டிய நடைமுறை முட்டுக்கட்டைகளை நீக்கியும், உள்ளூர் மொழி அதிக அளவில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தும் நீதி வழங்குவதற்கான ஒட்டுமொத்த நடைமுறையையும் எளிதாக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

 

நீதி தேடும் ஏழை - எளிய மக்களின் புகலிடமாக உயர் நீதிமன்றங்களை மாற்ற என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதித்துறையில் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் வலியுறுத்திவந்தார்களோ, அவை அனைத்தையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்மொழிந்திருக்கிறார். அவற்றில் முதன்மையானது உயர் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இது சென்னை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற உதவும்.

 

சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளாலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த  2006ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தல் காரணமாக, தமிழை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், 15 ஆண்டுகள் ஆகியும் அந்தத் தீர்மானம் அனுப்பப்பட்ட நிலையிலேயே முடங்கிக் கிடக்கிறது. உயர் நீதிமன்றத்தில் தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

 

சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அதனால் தமிழை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க இயலாது என்றும் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்தது. ஆனால், அதிகாரப்பூர்வமான வகையில் சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு மத்திய அரசுகளிடமிருந்து கடந்த 15 ஆண்டுகளாக பதில் இல்லை.

 

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி உயர் நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக ஹிந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர் நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வழியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. தமிழை நீதிமன்ற மொழியாக்க முட்டுக்கட்டை போட வேண்டும் என்று நினைத்த அப்போதைய மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டு தமிழுக்கு தடை போட்டது. ஆனால், இப்போது தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை உயர் நீதிமன்றத்தில் அதிகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களே கூறியிருக்கிறார். அதனால், தமிழை சென்னை உயர் நீதிமன்ற மொழியாக்குவதற்கு எந்த தடையுமில்லை.

 

எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி அவரின் பரிந்துரையை பெற்று குடியரசுத் தலைவர் மூலம் அறிவிக்கை வெளியிடச் செய்யுமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தேவைப்பட்டால் பேரவையில் புதிய தீர்மானத்தை இயற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்