சிதம்பரம் பகுதியில் சரவணபவ கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் அண்ணாமலைநகர், கனகசபை நகர். திருவக்குளம், மாரியப்ப நகர், காசுக்கடை தெரு உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதில் திருவக்குளம், கனகசபை நகர், தில்லையம்மன் கோயில் அருகே உள்ள கடை என இன்னும் சில கடைகள் கடந்த 4 நாட்களாகத் திறக்கவில்லை. இதனால் ஏழை பொதுமக்கள் மாதம் முதல் வாரத்தில் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமம் அடைவதாகக் கூறுகின்றனர். மேலும் ரேஷன் கடைகளை உடனே திறக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சிதம்பரம் வட்ட வழங்கல் அலுவலர் நந்திதாவிடம் கேட்டபோது, ''சிதம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் சரவணபவ கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் செயல்படும் கடையில் பணியாற்றிய ஊழியர்களை பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மாற்றம் செய்யப்பட்ட கடைகளில் பணிசெய்யமாட்டேன் எனக் கூறி கடையைத் திறக்காமல் இருந்து வருகிறார்கள். இது குறித்து பொதுமக்கள் மத்தியில் இருந்து தொடர்ந்து புகார் வந்தவண்ணம் உள்ளது. இது தவறான நடைமுறை சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
கடலூர் மாவட்ட கூட்டுறவுதுறை துணைப்பதிவாளர் சண்முகம் கூறுகையில், ''சிதம்பரம் பகுதியிலுள்ள ரேஷன் கடையில் பணியாற்றிய சிலருக்குக் கடலூர் தலைமையிடத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆட்கள் வந்து பணியில் சேரும் வரை ஏற்கனவே இருந்தவர்கள் தான் பணியில் இருந்து பொதுமக்களுக்கு சேவை செய்யவேண்டும். இவர்கள் கடையைத் திறக்காதது பற்றி இதுவரை தெரியாது. சம்பந்தபட்டக் கண்காணிப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்'' என்றார்.
தமிழ்நாடு நியாவிலைகடை பணியாளர்கள் சங்க மாநிலபொதுசெயலாளர் ஜெயச்சந்திரராஜா கூறுகையில், ''ரேஷன் கடையில் பணியாற்றுபவர்கள் மிகவும் சொற்ப வருமானத்தில் பணியாற்றி வருகிறார்கள். சிதம்பரத்தில் உள்ளவர்களை கடலுருக்கு மாற்றினால் போக்குவரத்து செலவு போக மிஞ்சுவது வெறும் சொற்ப வருமானம் தான். விற்பனையாளர்களைத் தலைமையிடத்தில் உள்ள சுயசேவை பிரிவுக்கு மாற்றுகிறார்கள் அதில் ஊழியர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பணியில் இருக்க வேண்டும். இதற்கு அலுவலகத்தில் உள்ளவர்களைக் கொண்டு பணி செய்யலாம். சுயசேவைபிரிவில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. இதனால் ஊழிகள் சொற்ப சம்பளத்தையும் இழக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் மட்டத்தில் பேசி வருகிறோம். விரைவில் சரிசெய்யப்படும்'' என்றார்.