தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய இடியுடன்கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்துவருவதால் முக்கியச் சாலைகள் எல்லாம் தண்ணீரில் மூழ்கியிருக்கிறது. குறிப்பாக சென்னை மயிலாப்பூரில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னையில் சாந்தோம், பட்டினப்பாக்கம், புளியந்தோப்பு டிக்காஸ்டர் சாலை, வடச் சென்னை டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, எம்.எம்.கார்டன் வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.