கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலை வேலங்காடு மயானத்திலிருந்து தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டுமென்ற, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை மாநகராட்சி வாபஸ் பெற்றுக் கொண்டதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலை, கடந்த ஆண்டு ஏப்ரல் 20- ஆம் தேதி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய சென்றபோது பொது மக்களின் எதிர்ப்பால், வேலாங்காடு இடுகாட்டில் சென்னை மாநகராட்சி அடக்கம் செய்தது.
இந்நிலையில், வேலங்காட்டிலிருந்து கணவரின் உடலை தோண்டி எடுத்து, கிறிஸ்தவ முறைப்படி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி மனைவி ஆனந்தி, சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதை பரிசீலித்த சென்னை மாநகராட்சி ஆணையர், ஆனந்தியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வேலங்காடு மயானத்திலிருந்து மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், கரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து ஒரு சுடுகாட்டில் இருந்து மற்றொரு சுடுகாட்டில் அடக்கம் செய்வது என்பது சாத்தியமில்லாதது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சென்னை மாநகராட்சி சார்பில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்த நீதிபதிகள், மாநகராட்சியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, வேலங்காடு மயானத்திலிருந்து மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டுமென்ற தனி நீதிபதியின் தீர்ப்பின் அடிப்படையில், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.