
மனைவி மயங்கி விழுந்ததைப் பார்த்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாங்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாங்காடு சீனிவாச நகரைச் சேர்ந்தவர்கள் சுரேஷ்(39) - சுகன்யா(28) தம்பதியினர். இதில் சுரேஷ் ஆவடி அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சுரேஷ் நேற்று முன்தினம் இரவு, பழுதான தனது மனைவியின் இருசக்கர வாகனத்தை சரிபார்த்து வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். அப்போது சுரேஷ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். இதனால் தம்பதியினர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, சுரேஷ் தனது மனைவி சுகன்யாவை தாக்கியதாகத் தெரிகிறது. அதனால் சுகன்யா மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனால் பதற்றமடைந்த சுரேஷ், வீட்டின் அறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சுகன்யாவிற்கு மயக்கம் தெளிந்த பிறகு அறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த தனது கணவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், சத்தம் போட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சுரேஷின் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.