கரூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது கூடுதல் வாக்கு எண்ணும் மையங்களை அமைக்க வேண்டும் என்று கோரி தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரும், கரூர் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கையும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன? மருந்துகள் எவ்வாறு கிடைக்கிறது? என்பது தொடர்பான வழக்கையும் சேர்த்து இன்று (30/04/2021) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி அமர்வு, "வாக்கு எண்ணிக்கையின்போது தொண்டர்களைத் தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை தினமான மே 2ஆம் தேதி அன்று பட்டாசுகள் வெடிக்கக்கூடாது; வெற்றிக் கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் கூடாது. சிறந்த நடவடிக்கைகள் எடுத்து தலைவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் செய்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றன. கரோனா பரவலைத் தடுக்க அரசு அறிவித்துள்ள விதிகளைக் கட்சியினர் முறையாகப் பின்பற்ற வேண்டும்" என்று அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மே 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.