தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய இடி, மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்திற்கு இரண்டு நாட்களுக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னையில் இன்றும், நாளையும் கனமழை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக மயிலாப்பூர் டி.ஜி.பி அலுவலகப் பகுதியில் 20 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகம் 14 செ.மீ., ரெட் ஹில்ஸ் 13 செ.மீ., அம்பத்தூர் 9 செ.மீ., ஆலந்தூர், சோழிங்கநல்லுரில் தலா 8 செ.மீ., எண்ணூரில் 7 செ.மீ., பாலவாக்கத்தில் 15 செ.மீ., பாடியில் 12.4 செ.மீ., ஜார்ஜ் டவுனில் 11.2 செ.மீ., கொரட்டூர் 10.1 செ.மீ., அண்ணா நகர் 10.1 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 10.4 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
2017 -ஆம் ஆண்டு நவம்பருக்குப் பிறகு, சென்னையில் குறைந்த நேரத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.