சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அத்துடன் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் வழக்கம். அந்த வகையில் இந்திய விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் பதிவுக்கு சித்தார்த்தின் பதில் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் பஞ்சாப் சென்ற போது போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். இது தொடர்பாக இந்திய விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் வெளியிட்ட பதிவுக்கு நடிகர் சித்தார்த் அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த் மன்னிப்பும் கேட்டார்.
ஆனால் அதற்கு முன்பே இந்த பதிவு பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் மஹாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தது. தமிழக காவல்துறைக்கும் கடிதம் எழுதியிருந்தது. சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட சாய்னா, 'சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட நடிகர் சித்தார்த்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'இரண்டு புகார்கள் வந்துள்ளது. சென்னை சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வரும் நிலையில் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. கரோனா அதிகரித்துவரும் சூழலில் சித்தார்த்திடம் எந்த முறையில் விசாரணை நடத்துவது என ஆலோசனை நடத்தி வருகிறோம்'' என்றார்.