publive-image

அனுமதியில்லா கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை நெற்குன்றம் பகுதியில் ரூபஸ், ஆல்பர்ட் ஆகியோர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும விதிகளை மீறி, அனுமதியின்றி கட்டடம் கட்ட தடை விதித்து 2016இல் பிறப்பித்த உத்தரவைஅமல்படுத்த வளசரவாக்கம் மண்டல செயற்பொறியாளருக்கு உத்தரவிடக் கோரி ஸ்டீபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டுமான பணியைத் தொடர தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் இடிக்கப்பட்டதா? என மாநகராட்சி தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டதாலும், பொறியாளர் மரணமடைந்துவிட்டதாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பணிமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி குறித்தும், இறந்த பொறியாளர் குறித்தும் அறிக்கையில் குறிப்பிடாததைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். கட்டுமானம் மேற்கொள்ள தடை விதித்து நோட்டீஸ் அனுப்பியதுடன் தங்கள் பணி முடிந்துவிட்டதாக கருதி, எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதால் நகரமைப்பில் பல பிரச்சினைகள் உருவாவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

Advertisment

நகர்மயமாதல் காரணமாக நகரங்கள் விரிவடைந்துவரும் நிலையில், அனுமதியில்லா கட்டுமானங்களை ஆரம்ப நிலையிலேயே அதிகாரிகள் தடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்காததால் இந்த வகை கட்டடங்களை அகற்றக் கோரி ஏராளமான வழக்குகள் குவிந்து நீதிமன்றத்துக்கு தர்மசங்கடத்தைஏற்படுத்துகிறது எனக் கூறியுள்ளனர். நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தும் அதிகாரிகளின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனக் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் 2016ஆம் ஆண்டே கட்டுமான பணிகளுக்குத் தடை விதித்து பிறப்பித்த நோட்டீஸின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும், இத்தனை ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.